ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல்
ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து இன்று மறுஆய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட மனுதாரர் உதித் சூட் என்பவர் உச்சநீதிமன்றத்தில் இன்று இதற்கான மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். அக்டோபர் 17அன்று, ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அதை செயல்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவது நாடாளுமன்றத்தின் கையில் தான் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. இந்திய தலைமை நீதிபதி(CJI) டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, அக்டோபர்-17ஆம் தேதி இதற்கான தீர்ப்பை வழங்கியது.
முரண்பட்ட கருத்துக்களை கூறிய நீதிபதிகள்
ஒரே பாலின தம்பதிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதியும் நீதிபதி ஹிமா கோஹ்லியும் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், பிற நீதிபதிகள் ஒரே பாலின திருமணத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கினர். எனவே, பெரும்பான்மையின் அடிப்படையில், ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரிய 52 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரே பாலின தம்பதிகளுக்கு குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமையையும் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. எனவே, அந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக, பால்புதுமையினருக்கு(LGBTQIA+) எதிரான பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்று கூறிய போது, அது முரணாக இருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.