சோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் கடிதங்களை திரும்ப கேட்ட மத்திய அரசு
பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) கடந்த 2008 ஆம் ஆண்டு யுபிஏ ஆட்சியின் போது சோனியா காந்திக்கு அனுப்பிய இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கைப்பட எழுதிய தனிப்பட்ட கடிதங்களை, மீண்டும் திரும்ப தருமாறு முறைப்படி கோரியுள்ளது. அது அரசின் சொத்து எனவும், அதனால் அவற்றை அரசின் வசம் ஒப்படைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எழுதப்பட்ட கடிதத்தில், PMML உறுப்பினர் ரிஸ்வான் காத்ரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், சோனியா காந்தியிடமிருந்து அசல் கடிதங்களை மீட்டெடுக்க வேண்டும் அல்லது புகைப்பட நகல் அல்லது டிஜிட்டல் நகல்களை வழங்குமாறு வலியுறுத்தினார். செப்டம்பரில் சோனியா காந்தியிடமே இது போன்ற கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சிக்காலத்தில் சோனியா காந்தியிடம் வழங்கப்பட்ட கடிதங்கள் அடங்கிய பெட்டி
மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த கடிதங்கள், 1971ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு நினைவகத்தால் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திடம் (தற்போது PMML) ஒப்படைக்கப்பட்டன. அவை 51 பெட்டிகளில் அடைக்கப்பட்டு, 2008 இல் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. எந்த காரணத்தினால் அவை சோனியா காந்தியிடம் ஒப்புவிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த கடிதங்களில், பண்டித நேருவிற்கும், எட்வினா மவுண்ட்பேட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜெயப்பிரகாஷ் நாராயண், பத்மஜா நாயுடு, விஜய லக்ஷ்மி பண்டிட், அருணா ஆசஃப் அலி, பாபு ஜக்கிவன் ராம் மற்றும் கோவிந்த் பல்லப் பந்த் போன்ற முக்கிய பிரமுகர்களுக்கு இடையேயான நடந்த கடிதப் பரிமாற்றங்கள் இந்தத் தொகுப்பில் அடங்கும்.