Page Loader
EPF வட்டி விகிதத்தை உயர்த்தியது EPFO

EPF வட்டி விகிதத்தை உயர்த்தியது EPFO

எழுதியவர் Sindhuja SM
Feb 10, 2024
05:35 pm

செய்தி முன்னோட்டம்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதியின்(EPF) வட்டி விகிதத்தை 8.25% ஆக உயர்த்தியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான EPFO ​இன் மத்திய அறங்காவலர் குழு, அந்த அமைப்பின் 235வது குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்ட வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் அளித்தது. "இந்திய தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது " என்று அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா

நிதி அமைச்சகம் அங்கீகரித்த பின்பு EPF ​​வட்டி விகிதம் வழங்கப்படும் 

2023-24ஆம் ஆண்டின் EPF டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இனி ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அரசாங்கத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து, 2023-24க்கான EPF வட்டி விகிதம் கிட்டத்தட்ட ஆறு கோடி EPFO ​​சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். நிதி அமைச்சகம் அங்கீகரித்த பின்பு தான் EPFO ​​வட்டி விகிதம் வழங்கப்படும். EPF என்பது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய வைப்பு நிதி கணக்காகும். வேலை வழங்கும் முதலாளிகள் கண்டிப்பாக சம்பளத்துடன் சேர்த்து ஒரு ஊழியருக்கு EPF தொகையையும் வழங்க வேண்டும். ஒரு ஊழியரின் வருவாயில் 12% அவரது EPF கணக்கில் செலுத்தப்படும். அப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் தொகை EPF கணக்கில் வைப்பு வைக்ப்படும்.