NEET-UG மறுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: அனைத்து விண்ணப்பதாரர்களின் தரவரிசைகளிலும் திருத்தம்
தேசிய தேர்வு முகமை(NTA) நீட்-யுஜி 2024 மறுதேர்வுக்கான முடிவுகளை இன்று அறிவித்தது. கடந்த மே 5 அன்று நடைபெற்ற பிரதான தேர்வின் போது நேர இழப்பின் காரணமாக கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது. கருணை மதிப்பெண்களைச் சுற்றி ஒரு பெரிய சர்ச்சை வெடித்த பிறகு, NTA பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வை மீண்டும் எழுதுவதற்கான விருப்பத்தை வழங்கியது. அதனை தொடர்ந்து, ஜூன் 23ம் தேதி ஏழு மையங்களில் நடந்த மறுதேர்வில்மொத்தம் 813 மாணவர்கள் கலந்து கொண்டனர். மறுத்தேர்வை தொடர்ந்து, தேர்வில்(1,563 பேரில்) பங்கேற்ற 813 விண்ணப்பதாரர்களின் தற்காலிக விடைத்தாள்கள், ஸ்கேன் செய்யப்பட்ட OMR தாள்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பதில்கள் ஜூன் 28 அன்று காட்சிப்படுத்தப்பட்டன.
கருணை மதிப்பெண்கள் ரத்து
கடந்த மே 5-ம் தேதி 4,750 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில், முறைகேடுகள் நடந்ததாகவும் வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுவரை இல்லாத அளவு இந்த வருடம் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அதே நேரத்தில் 1,563 மாணவர்களுக்கு கூடுதலாக கருணை மதிப்பெண்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருணை மதிப்பெண்கள் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து ரத்து செய்யப்பட்டன. இந்த மறுதேர்வும் அதற்காகவே நடத்தப்பட்டது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி NTA இணையதளத்தில் தங்கள் முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம்.