கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியானது, நாட்டின் பிற வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு சேவை தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதுவரை ஒரு குறிப்பிட்ட வங்கியானது, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை வழங்குவதற்கு குறிப்பிட்ட கார்டு நெட்வொர்க்குடன் கைகோர்த்து, அந்த கார்டு நெட்வொர்க்கின் சேவையை மட்டுமே பயன்படுத்தும் வகையில் கார்டுகளை வழங்கும். இனி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கான கார்டு நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கும் உரிமையை வாடிக்கையாளர்களிடமே அளிக்க வேண்டும் எனக் அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. மேலும், வங்கிகளானது ஒரு குறிப்பிட் கார்டு நெட்வொர்க் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபடக் கூடாது எனவும், தங்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பல கார்டு நெட்வொர்க் சேவைத் தேர்வுகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
கார்டு நெட்வொர்க் என்றால் என்ன?
தற்போது இந்தியாவில் விசா, மாஸ்டர்கார்டு, ரூபே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைனர்ஸ் கிளப் ஆகிய ஐந்து கார்டு நெட்வொர்க்குகள் வங்கிகளுடன் இணைந்து சேவை வழங்கி வருகின்றன. நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியானது மேற்கூறிய ஏதாவது ஒரு கார்டு நெட்வொர்க்குடன் தொடர்பு வைத்து நமக்கு டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கும். ஆனால், இனி மேற்கூறிய கார்டு நெட்வொர்க்குகளில் எந்த நெட்வொர்க் வேண்டும் என்பதை நாமே தேர்ந்தெடுத்தக் கொள்ள முடியும். இந்த மாறுதலை நாம் எப்போது வேண்டுமானாலும் நமது வங்கியை அணுகி மேற்கொள்ள முடியும். இந்த புதிய விதிமுறைகளை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது ரிசர்வ் வங்கி.