காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்?
காலநிலை மாற்றத்தால் பூமி அதிகமாக பாதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இதனால் தமிழகத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி ஆராய்ச்சியாளர் அஞ்சல் பிரகாஷ் கூறியுள்ளார். காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழுவால் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கை, புதைபடிம எரிபொருள் பயன்பாட்டாலும், பசுமை இல்ல வாயுவின் உமிழ்வாலும் பூமியின் சராசரி வெப்பநிலை 1.1°Cஆக உயர்ந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெப்பநிலை உயர்வால் வெள்ளம், வறட்சி, கனமழை, புயல் போன்ற பேரழிவுகள் அடிக்கடி ஏற்பட்டு உலக சூழலையும் மக்களையும் பாதிக்கும் என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை உருவாக்குவதில் பங்களித்த பாரத் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் பாசிலி என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான அஞ்சல் பிரகாஷ், காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி இருக்கிறார்.
ஆராய்ச்சியாளர் அஞ்சல் பிரகாஷ் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் இருக்கும் நிலையில், காலநிலை மாற்றத்தால் இது இன்னும் அதிகரிக்கக்கூடும். இதனால் விவசாயமும் மனித வாழ்க்கையும் பெரிதளவில் பாதிக்கப்படும். காலநிலை மாற்றத்தால் இனி அடிக்கடி புயல், வெள்ளம் போன்ற பேரிடர்கள் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது, இதனால், உள்கட்டமைப்பு வசதிகளில் அதிக சேதம் ஏற்படும். தமிழகம் விவசாய தொழில் சார்ந்த மாநிலமாக இருப்பதால், மழைப்பொழிவு இல்லாமல் விவசாயிகள் அதிகம் சிரமப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் அதிக கடலோர மாவட்டங்கள் இருக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும், கடல் மட்ட உயர்வு, கடல் அரிப்பு போன்றவற்றால் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். உள்கட்டமைப்பு வசதிகளும் சேதப்படுத்தப்படும். என்று தெரிவித்திருக்கிறார்.