கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு
தமிழக மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ம்வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 2022ம்ஆண்டு ஜூலை 13ம்தேதி மரணமடைந்தார். இவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், இந்த வழக்கினை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி புலனாய்வுகுழு அமைக்கப்பட்டு விசாரிக்கவேண்டும் மரணமடைந்த மாணவியின் தாயார் செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சிபிசிஐடி போலீசார் நடத்தும் விசாரணை நியாயமாக இல்லை என்றும், கொலை குற்றச்சாட்டின்கீழ் இன்னும் இந்த வழக்கு பதிவிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அவர்கள் மறைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம்
மேலும் அந்த மனுவில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை தனக்கு காண்பிக்கவில்லை என்றும், சம்பவம் நடந்த இடம், அதன் ஆதாரங்கள் அனைத்தும் தடையம் தெரியாத அளவிற்கு முழுமையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்னே விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வு அறிக்கையை பெற்ற பின்னர் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு இந்த நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் வழங்கியுள்ளது என்று விளக்கம் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாணவியின் தாயார் தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவோடு இணைத்து விசாரணையை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.