திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை
திருப்பூரில் தங்கி பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம், திருப்பூர் பனியன் ராக்ஸ் சங்க நிர்வாக தலைவர் லியாகத் அலி, துணை தலைவர் புகழ் வேந்தன் ஆகியோர் மனு அளித்துள்ளார்கள். அந்த மனுவில், தங்கள் சங்கத்தில் 1,500க்கும் மேற்பட்ட மறுசுழற்சி முறையில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வருகிறார்கள். சமீபத்தில் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வீடியோக்கள் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால் அச்சமடைந்த வடமாநிலத்தவர்கள் வேலையை விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
மேலும் இதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது என்றும், தமிழக தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குகிறார்கள் என்ற தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதனை தொடர்ந்து, திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களை அழைத்து காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., அண்மையில் நடத்திய தொழிற்சங்க கூட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த கூட்டத்தில் மொழி பிரச்சனை காரணமாக வடமாநிலத்தவர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று பொருளாளர் கோபால்சாமி பேசியது குறிப்பிடத்தக்கது.