குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர்
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்திசிலை அருகே தான் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா கொண்டாடப்படும். ஆனால் இந்தாண்டு அங்கு மெட்ரோ ரயில் கட்டுமானபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதால் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு இந்தாண்டு நடக்கும் இந்தவிழா பெருமளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக உழைப்பாளர் சிலை அருகே உள்ள பகுதிகளில் பிரம்மாண்டமான முறையில் பந்தல்கள் போடப்பட்டு வருகிறது. அங்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்பட பலமுக்கிய பிரமுகர்கள் அமருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 7.52 மணிக்கு முதல்வர் வருகை தருவார் என்று கூறப்படுகிறது.
தேசிய கொடியை ஏற்றி வைக்கும் ஆளுநர் - மாலை ஆளுநர் மாளிகையில் குடியரசு தினவிழா
அதனைதொடர்ந்து, 7.54மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தனது மனைவியுடன் வருகை தருவார், அவரை தமிழக முதல்வர் வரவேற்பார். இதனைதொடர்ந்து, காலை 8மணிக்கு தேசியகொடியை, தேசியகீதம் இசைக்கப்படும் பொழுது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஏற்றி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அப்பொழுது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்துவந்து மலர் தூவும். பின்னர் பல்வேறு படை அணியினர் செலுத்தும் வணக்கங்களை ஆளுநர் ஏற்றுக்கொள்வார். தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட படைபிரிவினர் அணிவகுத்து செல்வார்கள். அதன்பின்னர் அணிவகுப்பு மேடைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதக்கங்களை உரியவர்களுக்கு அளிப்பார். இதனையடுத்து அன்று மாலை 4.30மணிக்கு ஆளுநர்மாளிகையில் குடியரசு தினவிழா நடைபெறும். அங்கு அனைவரையும் ஆளுநரும் அவர் மனைவியும் வரவேற்பார்கள். தேநீர்விருந்து முடிந்தபின்னர், ஆளுநர் சிலவிருதுகளை உரியவருக்கு வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.