நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
செய்தி முன்னோட்டம்
நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
இந்த கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாத கூட்டம் சதி திட்டம் தீட்டுவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் பெருமளவில் எடுக்கப்பட்டு வருகிறது.
விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தலைநகர் டெல்லி முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து குடியிருப்பு மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய போலீசார், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்கள்.
அதன்படி, வாடகைதாரர்கள், வேலையாட்கள் போன்றோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன.
மோப்பநாய்கள் கொண்டு சோதனை
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு 19ம் தேதி முதல் அமலில் உள்ளது
ஆங்காங்கே தொடர்சோதனைகள் நடத்தப்படுவதோடு, எல்லை பகுதிகளில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு கடந்த 19ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
விமான நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மோப்ப நாய்கள் உதவியோடு சோதனை செய்யப்படுகிறது.
துப்பாக்கி ஏந்திய போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடக்டர்களுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள்.
மேலும், விமான எரிபொருள் நிரப்பும் இடத்தில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 24,25,26ம் தேதிகளில் 5 அடுக்கில் இருந்து 7அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படுவதோடு, 30ம்தேதி நள்ளிரவுவரை இந்த பாதுகாப்புகள் அமலில் இருக்கும் என்றும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.