அரசு மருத்துவர்களின் வருகை நேரத்தினை கண்காணிக்க சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அண்மையில் செவிலியர் அலட்சியம் காரணமாக ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக பரபரப்பான ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககந்தீப்சிங் பேடி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதன்படி, அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதை தனிப்பட்ட கவனம் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். புறநோயாளிகள் பிரிவுகளில் சரியான நேரத்தில் மருத்துவர்கள் வருவதை உறுதி செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவில், மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் பகல் 12மணி வரை இருக்கவேண்டியது கட்டாயம்.
குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவு
அதேபோல், மாவட்டத்தலைமை மற்றும் பிற அரசு மருத்துவமனைகளில் பல் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் காலை 8 மணி- பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி-5 மணி வரையும் பணியில் இருக்கவேண்டும். 24 மணிநேர ஷிப்டுகளில் உள்ள மருத்துவர்கள் மாலை 3 மணி-5 மணிவரை புறநோயாளிகளை பரிசோதிக்க வேண்டும். 1 முதல் 3 வரையுள்ள மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதாரநிலையங்களில், மருத்துவர்கள் காலை 9 மணி முதல் 4 மணி வரை புறநோயாளிகளை பார்க்கவேண்டும். 5 மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதார நிலையங்களில், 24 மணிநேரமும் மருத்துவர்கள் நோயாளிகளை ஷிப்ட் முறையில் பரிசோதிக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் பின்பற்றப்படுகிறதா என்பதனை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.