வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களுக்கு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்படுகிறது
கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதி கனமழை கொட்டியது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு அப்பகுதிகளில் கடும் பாதிப்படைந்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிவு காரணமாக கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, நேற்று(டிச.,28) தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் உயரதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டு சில அறிவுறுத்தல்களை அவர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இன்று(டிச.,29)முதல் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தொகை ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
முன்னதாக கூட்டநெரிசலை தவிர்க்க 26ம்.,தேதி முதல் இதற்கான டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டது. அதில் நிவாரணத்தோகை வழங்கும் தேதி, நேரம் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெள்ள பாதிப்புகளின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த 4 மாவட்டங்களில் 6,63,760 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசியும், ரூ.6,000 நிவாரணத்தொகையும் குடும்பத்தாரர் அட்டையை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது. அதேபோல், 14,31.164 குடும்பங்களுக்கு பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.1,000 வழங்கவும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.550கோடி மாநில தலைமைக்கூட்டுறவு வங்கி கணக்கில் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தொகை மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ரேஷன் கடைகளின் சங்கங்களின் வங்கி கணக்கில் நேற்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.