உயிருள்ள மூதாட்டியை சுடுகாட்டில் வீசிச் சென்ற உறவினர்கள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு என்ற ஊரில் உயிருடன் இருந்த மூதாட்டியை உறவினர்களே சுடுகாட்டில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் மூணாற்று பிரிவில் சுடுகாடு ஒன்று இருக்கிறது. நேற்று அந்த சுடுகாடு அருகே ஒரு வயதான மூதாட்டி கட்டிலில் உட்கார்ந்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த பகுதி மக்கள் இது குறித்து விசாரித்த போது, மூதாட்டியின் உறவினர்களே அவரை சுடுகாட்டில் விட்டு சென்றது தெரிய வந்திருக்கிறது. இதை அறிந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். செய்தி அறிந்து விரைந்து வந்த களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் பிற காவலர்கள், மூதாட்டியிடம் விசாரித்தனர்.
மூதாட்டியை அடித்து லோடு ஆட்டோவில் ஏற்றிய உறவினர்கள்
அப்போது, அந்த மூதாட்டி களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் இசக்கியம்மாள் (80) என்பதும் தெரியவந்தது. இசக்கியம்மாளின் கணவர் உயிரிழந்ததால் அவர் தனது மகன் கந்தசாமியின் பராமரிப்பில் இருந்திருக்கிறார். திடீரென்று அவரது மகனும் உயிரிழந்துவிடவே, இசக்கியம்மாளை அவரது மகனின் இரு மனைவிகள் கவனித்து வந்தனர். இசக்கியம்மாளும் அவரால் முடிந்த வேலையை பார்த்து பிழைத்த வந்திருக்கிறார். ஆனால், வயதாக ஆக அவரால் உழைத்து உண்ண முடியவில்லை. மேலும், அவருக்கு உடல்நல குறைவும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் உறவினர்களால் கைவிடப்பட்டு சுடுகாட்டில் வீசப்பட்டார். அவரது உறவினர்கள் அவரை அடித்து லோடு ஆட்டோவில் கட்டிலோடு ஏற்றி சுடுகாட்டில் வீசிவிட்டனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தாங்களே அந்த மூதாட்டியை கவனித்து கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.