டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது
டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று(செப்டம்பர் 30) முதல் தொடங்கியது. தேர்வுக்கு அக்டோபர் 28 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத தகுதியானவர்கள் யுஜிசியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத தேர்வு கட்டணமாக பொது பிரிவினருக்கு ₹1,150 ஆகவும், பொருளாதார ரீதியில் பின் தங்கிய வகுப்பினர் மற்றும் ஓபிசி வகுப்பினருக்கு ₹600 விண்ணப்ப கட்டணமாகவும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ₹300 விண்ணப்ப கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாளாகும். அக்டோபர் 30, 31 ஆம் தேதிகளில் விண்ணப்ப பதிவில் பிழைகளை திருத்திக்கொள்ளலாம்.
நெட் தேர்வுக்கு டிசம்பர் முதல் வாரத்தில் நுழைவு சீட்டு வெளியிடப்படும்
நவம்பர் கடைசி வாரத்தில் தேர்வு மையம் வெளியிடப்படும் எனவும், டிசம்பர் முதல் வாரத்தில் தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நெட் தேர்வுகள் டிசம்பர் 6ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும். விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைகள் வெளியிடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட் தேர்வு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் இடங்களை நிரப்புவதற்கான தகுதி தேர்வாகும்.