ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு
"ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தலாம், ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் குழுதான் அது பற்றி முடிவு எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, அரசு தரப்பில் இது கூறப்பட்டது. ஜம்மு காஷ்மீர் தனித்துவமான மாநிலம் என்றும், அரசாங்க காரணங்களுக்காக அது பிரிக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசு முன்வைத்த வாதம். செவ்வாயன்று நடந்த கடைசி விசாரணையில், ஜூன் 2018 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இல்லை எனவும், அங்கிருக்கும் மக்களின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
மாநில அந்தஸ்து கோரும் லடாக்
இதுவரை நடைபெற்ற வாதங்களில், சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து, இந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் போது சரியான நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது தான் முக்கியமாக இடம்பெற்றது. லடாக் யூனியன் பிரதேசமாகவே இருக்கும் என்ற சொலிசிட்டர் ஜெனரலின் அறிக்கைக்கு லடாக்கைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் மனுதாரர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் அங்கே குறிப்பிடப்பட்டது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, சரியான நேரத்தில் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் நேற்றைய விவாதத்திலும், இதற்கான காலக்கெடுவை மத்திய அரசு கூறவில்லை.