மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா! காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த ரவ்னீத் சிங் பிட்டு, வெள்ளிக்கிழமை தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75(2) பிரிவின் கீழ், ரவ்னீத் சிங் பிட்டின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார் என ராஷ்டிரபதி பவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காரணம்
ராஜினாமாவுக்கான பின்னணி என்ன?
ரவ்னீத் சிங் பிட்டின் ராஜ்யசபா எம்பி பதவிக் காலம் கடந்த ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இவரது பதவிக் காலம் முடிந்த நிலையில், அரசமைப்பு விதிகளின்படி தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாத சூழல் உருவானது.
இதனைத் தொடர்ந்து, தனக்கு நாட்டிற்கும் குறிப்பாகப் பஞ்சாப் மாநில மக்களுக்கும் சேவை செய்ய வாய்ப்பளித்த குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்குத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மாநில அரசியல்
பஞ்சாப் மாநில அரசியலில் கவனம் செலுத்த திட்டம்
அமைச்சரவையில் இருந்து விலகியுள்ள ரவ்னீத் சிங் பிட்டு, வரவிருக்கும் பஞ்சாப் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தீவிர களப்பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும், தனித்துப் போட்டியிடப்போவதாகவும் பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதனால் பஞ்சாபில் பாஜகவின் செல்வாக்கை உயர்த்தும் முக்கியப் பொறுப்பு முன்னாள் முதல்வர் பீந்த் சிங்கின் பேரன் என்பதால் ரவ்னீத் சிங் பிட்டிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவ்னீத் சிங்
ரவ்னீத் சிங் பிட்டின் அரசியல் பயணம்
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூன்று முறை மக்களவை எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவ்னீத் சிங் பிட்டு, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார்.
2024 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த போதிலும், அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுப் பின்னர் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார்.
2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெறும் 2 இடங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், 2027 சட்டமன்றத் தேர்தலில் வலுவான நிலையைக் கைப்பற்ற பிட்டுவின் இந்த முழுநேர அரசியல் வருகை பாஜகவிற்குப் பலம் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது.