Page Loader
₹500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா; யார் இந்த மோகினி மோகன் தத்தா
ரூ.500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா

₹500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா; யார் இந்த மோகினி மோகன் தத்தா

எழுதியவர் Sekar Chinnappan
Feb 07, 2025
11:09 am

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் வெளியிடப்பட்ட மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா உயில் அவரது நெருங்கிய கூட்டாளிகளை திகைக்க வைத்துள்ளது. இதற்கு காரணம் அவர் ₹500 கோடி, அதாவது தனது எஞ்சிய சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை, தன்னுடன் இருந்தவரும், அதிகம் அறியப்படாத பயணத் துறையில் தொழில்முனைவோருமான மோகினி மோகன் தத்தா என்பவருக்கு கொடுத்துள்ளதுதான். ஜாம்ஷெட்பூரை சேர்ந்த மோகினி மோகன் தத்தா, டாடாவுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்தார். அவரது குடும்பம் முன்பு ஸ்டாலியன் என்ற பயண நிறுவனத்தை நடத்தி வந்தது. இது பின்னர் 2013இல் தாஜ் குழும ஹோட்டல்களின் ஒரு பகுதியான தாஜ் சர்வீசஸ் உடன் இணைக்கப்பட்டது. இணைவதற்கு முன்பு, தத்தாவின் குடும்பம் 80% ஸ்டாலியன் பங்குகளை கட்டுப்படுத்தியது, டாடா இண்டஸ்ட்ரீஸ் மீதியை வைத்திருந்தது.

பின்னணி

மோகினி மோகன் தத்தாவின் பின்னணி

முன்பு தாமஸ் குக்குடன் இணைந்த டிசி டிராவல் சர்வீசஸ் நிறுவனத்தில் இயக்குனராகவும் மோகினி மோகன் தத்தா பணியாற்றினார். தத்தா ரத்தன் டாடாவுடன் ஆறு தசாப்த கால பந்தத்தை பகிர்ந்து கொண்டதாக டாடா இன்சைடர்ஸ் கூறியதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. டாடாவை முதன்முதலில் ஜாம்ஷெட்பூரில் 24 வயதில் தத்தா சந்தித்தார், பின்னர் அவர் ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். அக்டோபர் 2024ல் நடந்த டாடாவின் இறுதிச் சடங்கில் தத்தா பகிரங்கமாகப் பேசினார், மேலும் டிசம்பரில் நடந்த டாடாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப்பட்டார்.

அறக்கட்டளை

அறக்கட்டளை பணிகள்

இந்த எதிர்பாராத உயில் இருந்தபோதிலும், அறக்கட்டளை நற்பணிகள் டாடாவின் உயிலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளை மற்றும் ரத்தன் டாடா எண்டோமென்ட் டிரஸ்ட் மூலம் அவரது செல்வத்தின் பெரும்பகுதி தொண்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் என பெயரிடப்பட்டுள்ள அவரது ஒன்றுவிட்ட சகோதரிகள், தங்கள் பங்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் செல்வாக்கு மிக்க வணிகத் தலைவர்களில் ஒருவரான ரத்தன் டாடா, அக்டோபர் 2024 இல் தனது 86வது வயதில் காலமானார். இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம், ஆண்டு வருவாயாக $100 பில்லியனுக்கும் மேல் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.