ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள்
ராமர் மற்றும் ஜானகி தேவியின் சிலையை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து இரண்டு அரிய வகை கற்கள் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய செயலாளர் ராஜேந்திர சிங் பங்கஜ், நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் இருந்து இரண்டு ஷாலிகிராம் பாறைகளை கப்பலில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பிப்ரவரி 2020இல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் புதிய ராமர் கோயில் கட்டத் தொடங்கபட்டது. ராமர் பிறந்த இடம் அயோத்தி என்று நம்பப்படுவதால், இந்த கோயில் இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 18,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த கோவில், உலகின் மூன்றாவது பெரிய இந்து ஆலயமாக இருக்கும்.
அடுத்த ஜனவரிக்குள் தயாராகும் ராமர் சிலை
60 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஷாலிகிராம் பாறைகள் இரண்டு வெவ்வேறு லாரிகளில் அயோத்திக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று 26 டன் எடையும், மற்றொன்று 14 டன் எடையும் கொண்டுள்ளது. இந்த பாறைகளை பூசாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பூஜை செய்து வரவேற்று மாலைகளால் அலங்கரித்தனர். கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கும் முன் சில சடங்குகளையும் செய்தனர் என்று ANI செய்தி நிறுவனம் கூறியுள்ளது. நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஷாலிகிராமின்(புனித ஸ்தலம்) அருகே கண்டகி ஆற்றில் இந்த பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கல்லில் ராமரின் இளமை வடிவ சிலை செதுக்கப்பட்டு, கோயிலின் கருவறையில் வைக்கப்படும் என்றும் இது அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.