
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்துக்கு மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.
அதில் வந்த பயணிகளை சுங்கஇலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டிருந்த போது தமிழகத்தை சேர்ந்த 2 பயணிகளை கண்டு சந்தேகப்பட்டுள்ளார்கள்.
இதனால் அவர்களை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்கள்.
இதனையடுத்து அவர்கள் உடமைகளை சோதனைசெய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த கூடையில் உயிருள்ள பொருள் ஏதோ அசைவதுபோல் தெரியவந்துள்ளது.
அந்த கூடையை திறந்துப்பார்த்தப்பொழுது அதில் அரியவகை உயிரினங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் மத்தியஆப்ரிக்காவிலுள்ள சதுப்புநில காடுகளில் வசிக்கும் டி பிரஸ்ஸாவின் குரங்கு, நைஜீரியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் வாழும் சிலந்தி குரங்கு என கூறப்படும் 4அரியவகை குரங்குக்குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
அதிகாரிகள் முடிவு
அனுமதி உள்ளிட்ட எந்தவகை சான்றிதழும் வைத்திருக்கவில்லை என தகவல்
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அந்த குரங்குக்குட்டிகளை வளர்க்க எடுத்து வந்துள்ளதாக கூறியுள்ளார்கள்.
ஆனால் அதற்கான அனுமதி சான்றிதழோ, விலங்குகளுக்கு மருத்துவ சோதனை செய்ததற்கான சான்றிதழோ அவர்களிடம் இல்லை.
மேலும் இதுபோன்று வெளிநாட்டுகளில் இருந்து விலங்குகளை கொண்டு வர சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழும்வேண்டும், ஆனால் அதுவும் இல்லை.
இந்திய வனவிலங்கு துறை அனுமதி வழங்கிய சான்றிதழும் இருக்க வேண்டும் என கூறப்படும் நிலையில் எந்த ஆவணங்களும் இல்லை.
இதனால் அந்த 4 குரங்கு குட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது அரிய வகை குரங்கு வகையினை சேர்ந்தது என்பது தெரியவந்த நிலையில், அதனை மீண்டும் மலேசியாவிற்கே திருப்பியனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.