சிறார் பலாத்காரத்திற்கு மரண தண்டனை, ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது, இன்னும் பல: புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள்
காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் அகற்ற முற்படுவதால், இந்திய தண்டனைச் சட்டம், 'பாரதிய நியாய சன்ஹிதா' என்ற பெயரில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. நேற்று, லோக்சபாவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய சட்டங்களில் கும்பல் கொலை, சிறார்களை பலாத்காரம் செய்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றார். புதிய சட்டத்தில் தேசத்துரோகத்திற்குப் பதிலாக ஒரு புதிய குற்றமாக 'ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்' என்ற விதியும் இணைக்கப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவில் இருபது புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய 'பாரதிய நியாய சன்ஹிதா'வின் முக்கிய அம்சங்கள் என்ன?
வெளிநாட்டில், இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவர்களை தண்டிப்பதற்காக இணைக்கப்பட்ட மாறுதல்கள்
இந்த புதிய சட்ட திருத்தத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், பயங்கரவாத செயல்கள், ஹிட் அண்ட் ரன் குற்றங்கள், கும்பல் கொலை, பெண்களை ஏமாற்றி பாலியல் சுரண்டல், இந்தியாவிற்கு வெளியே இருந்துகொண்டு, நாட்டிற்கு எதிரான செயல்கள் மற்றும் பொய்யான அல்லது போலியான செய்திகளை வெளியிடுதல் ஆகியவை அடங்கும். புதிய மசோதாக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கும், கொலைகாரர்களைத் தண்டிக்கும் மற்றும் அரசுக்குத் தீங்கு விளைவிப்பவர்களைத் தடுக்கும் சட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.
வெளிநாட்டிலுள்ள இந்தியாவின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தால் குற்றம்
ஒரு பயங்கரவாத நடவடிக்கையின் வரம்பை விரிவுபடுத்தும் வகையில், புதிய மசோதாவில் இப்போது இந்தியாவின் பாதுகாப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், வெளிநாட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தை சேர்ந்த உடமைகளையோ, பொருட்களையோ சேதம் அல்லது அழிவை ஏற்படுத்துவது என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இது இந்தியாவில் உள்ள அரசு, பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாக மட்டுமே இருந்தது. எந்தவொரு செயலையும் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ, அரசாங்கத்தை நிர்பந்திக்க, ஒரு நபரை தடுத்து வைத்தல், கடத்தல் ஆகியவையும் இப்போது பயங்கரவாத விதியில் அடங்கும்.
தற்கொலை முயற்சி இனி குற்றமல்ல
கும்பல் கொலைகள் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து, மரண தண்டனை விதிக்கப்படலாம். சிறார் கற்பழிப்புக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும் பட்டியலிடப்பட்டுள்ளது. முதன்முதலில், ₹ 5,000 க்கும் குறைவான திருட்டு மற்றும் ஐந்து சிறிய குற்றங்களுக்கான தண்டனையாக 'சமூக சேவை'யை ஒரு தண்டனையாக இணைத்துள்ளது மத்திய அரசு. 'பாலின வரையறை'யில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய மசோதாவில், விபச்சாரம் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றங்களாக பட்டியலிடப்படவில்லை. தற்கொலை முயற்சி, இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
தேச துரோக சட்டம் ரத்து செய்யப்படுவதாக அமித்ஷா அறிவித்தார்
எனினும், முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தத்தில் இருந்து "தேசத்துரோகம்" என்ற வார்த்தை நீக்கப்பட்டு, இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் செயல்களை குற்றமாக கருதும் ஒரு பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய தேசத்துரோகச் சட்டம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை வழங்குகிறது. புதிய விதியானது அதிகபட்ச தண்டனையை ஏழு ஆண்டுகளாக அதிகப்படுத்தியுள்ளது.