Loading...
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்: 600 ஏக்கரில் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரிய தமிழக அரசு!
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரிய தமிழக அரசு

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்: 600 ஏக்கரில் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரிய தமிழக அரசு!

எழுதியவர் Vasuki
Oct 18, 2026
01:31 pm

செய்தி முன்னோட்டம்

ஆன்மிக மற்றும் சர்வதேச சுற்றுலா தலமான ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் மாணிக்கனேரியில் 600 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான இட அனுமதி கோரி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

மேம்பாடு

சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் புதிய திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளைக் காண்பதற்குத் தினந்தோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது இம்மாவட்டத்திற்குச் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதனால் தொலைதூர நகரங்களில் இருந்து வரும் பயணிகள் நீண்ட நேரம் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதற்குத் தீர்வாகவும், ஆன்மிக சுற்றுலாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

அனுமதி

மாணிக்கனேரியில் அமையவுள்ள புதிய தளம்

ராமேஸ்வரம் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 5 இடங்கள் அடையாளம் காணப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்பப் பரிந்துரைகளின்படி மாணிக்கனேரி பகுதி இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அங்கு 600 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையத்தை உருவாக்குவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஒரு விமான நிலையத்தை முழுமையாக நிறுவுவதற்கு மத்திய அரசின் இட அனுமதி மற்றும் கொள்கை அளவிலான ஒப்புதல் ஆகியவை அடிப்படைத் தேவையாகும்.

மத்திய அமைச்சகத்திடம் இட அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், இந்த அனுமதிகள் பெறப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு விமான சேவைக்கான இறுதி உரிமம் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT