அரசியல்வாதிகள் முதல் திரைநட்சத்திரங்கள் வரை: ராமர் கோவில் கும்பாபிஷேக விருந்தினர் பட்டியல்
மிகவும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும் ஜனவரி 22ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என்பது தெரிந்த விஷயமே. எனினும் அவரை தவிர வேறு யார் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்? இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், விளையாட்டு நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட ஏறத்தாழ 7,000 விருந்தினர்கள், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்குப் பிறகு, தினசரி 1,00,000 பக்தர்களை வரவேற்க அந்நகரம் தயாராகி வருகிறது.
அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அழைப்பு
விருந்தினர் பட்டியலில் முக்கியமாக, பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அடங்குவர். காங்கிரஸில் இருந்து, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் , முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடா, இமாச்சல பிரதேச அமைச்சர் விக்ரமாதித்ய சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்களான விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் விழவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அழைக்கப்பட்டுள்ள திரைத்துறை பிரபலங்கள்
இந்த நிகழ்வை அலங்கரிக்க திரைநட்சத்திரங்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன் , மாதுரி தீட்சித், ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் கங்கனா ரனாவத் போன்ற சினிமா பிரபலங்களும் இடம்பெறுவார்கள். இவர்களோடு விருந்தினர் பட்டியலில் ஆலியா பட் , ரன்பீர் கபூர் , அனுபம் கெர், சிரஞ்சீவி, சஞ்சய் லீலா பன்சாலி, ரிஷப் ஷெட்டி, அஜய் தேவ்கன், ஜாக்கி ஷெராஃப், டைகர் ஷெராஃப், பிரபாஸ் , மதுர் பண்டார்கர், தனுஷ், மோகன்லால், சன்னி தியோல், ஆயுஷ்மான் குரானா மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
விருந்தினர் பட்டியலில் இந்திய தொழிலதிபர்கள்
அரசியவாதிகள், திரைநட்சத்திரங்கள் தவிர, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ரட்டன் டாடா மற்றும் கௌதம் அதானி போன்ற முக்கிய தொழிலதிபர்களும் கும்பாபிஷேக விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பெருந்தலைகள் இடம்பெற்றுள்ள விருந்தினர் பட்டியலைக் கொண்டு, ராமர் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவிற்கான அழைப்பிதழில், பகவான் ராமர் மற்றும் ராமர் கோயிலின் வரைபடம் இடம்பெற்றுள்ளது. அதோடு, ராம ஜென்மபூமி இயக்கத்தின் சில முக்கிய நபர்களின் சுருக்கமான சுயசரிதைகள் கொண்ட சிறு புத்தகமும், பெரிய, அழகாக வடிவமைக்கப்பட்ட அட்டைகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. விழாவிற்கான அழைப்பிதழ்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது