ராம நவமி அன்று அயோத்தி ராமர் கோயில் 19 மணி நேரம் திறந்திருக்கும்
செய்தி முன்னோட்டம்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கி இரவு 11 மணி வரை 19 மணி நேரம் திறந்திருக்கும்.
மேலும், நான்கு 'போக' பிரசாதத்தின் போது தலா ஐந்து நிமிடங்கள் அந்த கோயிலின் திரைச்சீலைகள் இறைவனுக்காக மூடப்பட்டிருக்கும்.
கும்பாபிஷேகத்திற்குப் பிறகு அயோத்தியில் நடைபெறும் முதல் ராம நவமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இது செய்யப்படுகிறது.
ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வரும் சிறப்பு விருந்தினர்கள் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குப் பிறகு மட்டுமே அயோத்திக்கு வர வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அயோத்தி
மொபைல் போன்களை கொண்டுவர வேண்டாம் என அறிவுறுத்தல்
ஏப்ரல் 16 மற்றும் 18 க்கு இடையில் ராமர் தரிசனம் மற்றும் ஆரத்திக்கான அனைத்து சிறப்பு பாஸ் முன்பதிவுகளையும்அந்த அறக்கட்டளை ரத்து செய்துள்ளது.
"ராம நவமி நாளில், பிரம்ம முஹூர்த்தத்தின் போது அதிகாலை 3:30 மணிக்கு தொடங்கி, பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் இரவு 11 மணி வரை ராம் லல்லாவை தரிசனம் செய்ய முடியும்," என்று அது மேலும் கூறியுள்ளது.
தரிசனத்தின் போது ஏற்படும் அசௌகரியம் மற்றும் நேர விரயத்தை தவிர்க்க, பக்தர்கள் தங்களது மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.