ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன், இன்று காலை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 55.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி, சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
ஆனாலும், உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, நேற்று அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும், செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 7 :50 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
இலங்கைக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்த சாந்தன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன்.
அதன் பின்னர் அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு, நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும், திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இலங்கையில் தனது தாயை சந்திக்க வேண்டும் எனவும், தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனவும் நீதிமன்ற உதவியை நாடினார் சாந்தன்.
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர், அவருக்கு இலங்கை செல்ல அனுமதி வழங்கியது மத்திய அரசு. இந்த சூழலில் தான் அவர் காலமாகியுளார்.