6 மாத குழந்தையுடன் அதன் குடும்பத்தையும் கொன்று எரித்த கொடூர சம்பவம்
ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள செராய் கிராமத்தில் நேற்று(ஜூலை 19) இரவு ஆறு மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. பழிக்கு பழி வாங்குவதாற்காக கொலையாளிகள் அந்த குடுமபத்தினரின் கழுத்தை கோடரியால் அறுத்து, சடலங்களை முற்றத்திற்கு இழுத்துச் சென்று தீ வைத்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று திடீரென்று அந்த வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட கிராம மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, முற்றத்தில் நான்கு உடல்கள் கருகிய நிலையில் கிடந்தது.
இந்த கொலைகள் தனிப்பட்ட பகையின் விளைவாக இருக்கலாம்
பூனாராம்(55), அவரது மனைவி பன்வாரி(50), அவர்களது மருமகள் தபு(23) மற்றும் அவரது ஆறு மாத மகள் ஆகியோர் இந்த படுகொலையில் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு உணவை முடித்துவிட்டு பூனராமின் மகன் கல் குவாரிக்கு வேலைக்குச் சென்றதால் அவர் சம்பவம் நடக்கும் போது வீட்டில் இல்லை. இந்த கொலைகள் தனிப்பட்ட பகையின் விளைவாக இருக்கலாம் என்றும் ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் எஸ்பி(ஜோத்பூர் கிராமம்) தர்மேந்திர சிங் யாதவ் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த படுகொலைக்கு காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் தலைமையிலான மாநில அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக காங்கிரஸை சாடி வருகிறது.