பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிலேயே முதன்முதலாக கவர்னர்ஜெனரல் பதவியினை வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.ராஜகோபாலாச்சாரி.
இவரது கொள்ளுப்பேரனான சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியில் ஒரு அங்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 23ம்தேதி கட்சிலிருந்து விலகினார்.
இதுகுறித்து அவர் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளார்.
அதில்அவர், காங்கிரஸ் கட்சியில் எண்ணற்ற பதவிகளை வகித்ததற்காக கட்சிக்கும், சோனியா காந்திஜிக்கும் நன்றி.
அர்ப்பணிப்புடன் கடந்த 2 தசாப்தங்களாக நான் கட்சியில் பணியாற்றியதற்கான மதிப்பிற்குரிய விஷயங்களின் அடையாளங்கள் தற்போது இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
அதனால் தான் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தேன்.
ஒரு அரசியல் தளத்தின் மூலம் நாட்டுக்கு சேவையாற்றவேண்டும் என நல்ல நம்பிக்கையில் முயற்சி செய்யவுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
ட்விட்டரில் பதிவு
பாஜக.வில் இணைந்தார் கேசவன்
இதனையடுத்து தற்போது காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரனும், முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான கேசவன் அவர்கள் இன்று(ஏப்ரல்.,8) பாஜக'வில் இணைந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க.வில் என்னை சேர்த்துக்கொண்டதற்கு, அதுவும் மோடி தமிழகத்தில் இருக்கும் பொழுது, உங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே.அந்தோணியின் மகன் அணில் அந்தோணி அவர்களும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக.வில் தன்னை இணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.