தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நீடித்து வரும் நிலையில், கிழக்குத்திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும்(ஜன.,4), நாளையும்(ஜன.,5) நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஜனவரி 6ம் தேதி தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஜனவரி 7ம்.,தேதி சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு
அதேபோல், ஜனவரி 8ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் ஜனவரி 9ம் தேதி மற்றும் 10ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை தொடரும் என்றும் வானிலை அறிக்கை குறிப்பிட்டு கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று லட்சத்தீவு, குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று 40-45 கி.மீ.,வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ.,வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.