
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக். 3) தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், தென் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 7 ஆம் தேதி வரை லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மழை
இன்றைய மழை நிலவரம்
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏற்படலாம். நாளை (அக். 3) செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.