தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை அறிக்கை கூறுவதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் இடி மின்னல் கொண்ட லேசானது முதல் மிதமான மழை இருக்கும். மே 27 மற்றும் 28 தேதிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்
மேலும், தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு பகுதிகள், கேரளா மாநில கடலோர பகுதிகள் உள்ளிட்டவற்றில் மே 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். இதனைத்தொடர்ந்து, மே 27ம் தேதி மற்றும் 28ம்தேதி சூறாவளி காற்று இலங்கை பகுதியினை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த தேதிகளில் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.