கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தலா 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்கதிர்களும், நாகை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் தலா 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்கதிர்களும் வயலில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக மயிலாடுதுறையில் சம்பா சாகுபடி கடந்த நவம்பர் மாதம் தொடங்கியபோதும் மிக கனமழை பெய்து பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் தற்போது அறுவடை காலத்திலும் மழை பெய்து பாதிப்படைந்துள்ளது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நெல் பயிர்கள் பாதிப்பு குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு
இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், வேளாண் துறை களப்பணியாளர்கள் தற்போது பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வுக்கு பின்னரே, பாதிப்பு குறித்த நிலவரம் தெரியவரும், பாதிப்பு இருந்தால் அதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினர். இதனை தொடர்ந்து, மழை காரணமாக நேற்று பல இடங்களில் நெற்கதிர்களின் கொள்முதல் பணியும் நடைபெறவில்லை. இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லை விவசாயிகள் தார்பாய் கொண்டு மூடி வைத்திருந்தனர். இதனிடையே, மழையுடன் கடல் சீற்றமும் இருந்ததால் டெல்டா பகுதி மீனவர்கள் நேற்று(பிப்.,2) 3வது நாளாக மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. மேலும் இந்த மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.