டெல்லி பிகானேர் ஹவுஸ் கண்காட்சியில் பிரியங்கா காந்தியின் மகன் ரெய்ஹான் வத்ராவின் புகைப்படங்கள் அகற்றம்: ஏன்?
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி - ராபர்ட் வத்ராவின் மகனும், புகைப்படக் கலைஞருமான ரெய்ஹான் வத்ராவின் 'No Idea Is Final' தனிநபர் புகைப்படக் கண்காட்சியில், இளைஞர் போராட்டங்கள் தொடர்பான 75 புகைப்படங்கள் கடைசி நேரத்தில் அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சி திறக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, மொத்தம் காட்சிப்படுத்தப்படவிருந்த 105 புகைப்படங்களில் 75 புகைப்படங்கள் "அரசியல் சாய்வு கொண்டவை" எனக் கூறி அவற்றை அகற்றுமாறு அரங்கு நிர்வாகம் வலியுறுத்தியதாக ரெய்ஹான் வத்ரா குற்றம்சாட்டியுள்ளார். இதில் தேசியக் கொடி (திரங்கா) இடம்பெற்றிருந்த புகைப்படங்களும் அடங்கும்.
கண்டனம்
ஒரு கலைஞனாகப் பதிவு மட்டுமே செய்ததாகவும் ரெய்ஹான் வாதம்
மாலை 5 மணிக்குள் புகைப்படங்களை அகற்றாவிட்டால் கண்காட்சியே ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி புகைப்படங்கள் அகற்றப்பட்டு காலியான சிவப்பு நிற சுவர்களும் ஆணிகளும் மட்டுமே எஞ்சியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் தரப்பில், தங்களது புக்கிங் கொள்கை விதிகளின்படி அரசியல் சார்ந்த கருத்துகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தான் புகைப்படங்களில் இருந்த அரசியல் முழக்கங்கள் மற்றும் செய்திகளை ஏற்கனவே நீக்கிவிட்டதாகவும், கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற இளைஞர் போராட்டங்களை ஒரு கலைஞனாகப் பதிவு மட்டுமே செய்ததாகவும் ரெய்ஹான் சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ்
பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் மீது காங்கிரஸ் கண்டனம்
இந்தச் சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, "நாடெங்கிலும் உள்ள இளைஞர்களின் குரலை ஒடுக்க நினைக்கிறார்கள்; இது மிகவும் வேடிக்கையானது" என விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெடாவும் இந்த நடவடிக்கையை கடுமையாகச் சாடியுள்ளார்.
இருப்பினும், அனைத்து தடைகளையும் தாண்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மீதமுள்ள வனவிலங்கு மற்றும் சுருக்கக் கலை (abstract) புகைப்படங்களுடன் கண்காட்சி தொடர்ந்து நடைபெறும் எனவும், அகற்றப்பட்ட புகைப்படங்களை டெல்லியில் வேறொரு இடத்தில் காட்சிப்படுத்தவுள்ளதாகவும் ரெய்ஹான் தெரிவித்துள்ளார்.