மணிப்பூரில் ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தம், ஹெலிகாப்டரில் செல்ல முடிவு
மணிப்பூர் இனக்கலவரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான சுராசந்த்பூர் செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கான்வாய் இன்று காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இம்பாலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஷ்ணுபூரில் ராகுல் காந்தியின் கான்வாய் நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் இம்பாலுக்கு திரும்பியுள்ள ராகுல் காந்தி, சுராசந்த்பூருக்கு சாலை மார்க்கமாக செல்வதற்கு பதிலாக ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டுள்ளார். முன்னதாக, ராகுல் காந்தி பயணம் செய்த பாதையில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இனக்கலவரத்திற்கு பிறகு முதல்முறையாக மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி
கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் மலை மாவட்டங்களில் நடந்த பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்புக்கு பின்னர், மே 3 ஆம் தேதி மெய்டி சமூகத்தின் பட்டியல் பழங்குடி அந்தஸ்து கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மணிப்பூரில் கலவரம் வெடித்தது. மே மாதம் இனக்கலவரம் தொடங்கியதில் இருந்து சுமார் 50,000 பேர் இப்போது மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். மாநிலத் தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டி இனத்தவருக்கும் மலைகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நிவாரண முகாம்களைப் பார்வையிடவும், இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களைச் சந்திக்கவும் திட்டமிட்டு, ராகுல் காந்தி இம்பால் சென்றுள்ளார்.