அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்
பாஜகவால் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மூன்று பெரும் தலைவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்குகளை மட்டும் கையாளும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜூலை 27ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
நீதிமன்றம் தகுந்த தண்டனையை வழங்கும்: பாஜக
இதற்கு முன்பு கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு ஒப்பந்தங்களில் 40% கமிஷன் பெற்றதாகவும், மாநிலத்தில் இருந்து ரூ. 1.5 லட்சம் கோடி கொள்ளையடித்ததாகவும் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் விமர்சித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ் கேசவபிரசாத் காங்கிரஸ் தலைவர்கள் மீது கடந்த மே 9ஆம் தேதி புகார் அளித்தார். இந்த புகார் மனுவை இன்று விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜக, "உண்மைக்கு புறம்பாக பேசி, பொய்யான விளம்பரம் செய்து மக்களை தவறாக வழிநடத்துவது எளிது. அதற்கு நீதிமன்றம் தகுந்த தண்டனையை வழங்கும்" என்று ட்வீட் செய்துள்ளது.