'வாழ்க்கையை சீரழித்துவிட்டீர்கள்': பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் போட்டி தேர்வுகளில் தொடர்ந்து நடைபெறும் தேர்வுத்தாள் கசிவு சர்ச்சைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். முன்னதாக, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தனது X பக்கத்தில் எச்சரித்திருந்தார். மேலும், தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவான விசாரணை மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பதில்
பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
பிரதமரின் இந்த பதிவிற்குப் பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தி, நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கை விளைவித்தது பிரதமர் மோடி தான் என்று சாடியுள்ளார்.
"நமது இளைஞர்களின் எதிர்காலத்தை மிக மோசமாகப் பாதித்தது நீங்கள் தான். இந்தியக் கல்வி முறையை முழுமையாகக் கைப்பற்றி, அதைச் சீரழிக்க நீங்கள் அனுமதித்தீர்கள்; ஊக்கப்படுத்தினீர்கள். அதற்குப் பொறுப்பான ஒவ்வொருத்தரையும் பாதுகாத்ததும் நீங்கள் தான்."
மேலும், "கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவி விலகச் செய்ய வேண்டும்; மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் முதன்மையான கோரிக்கை" என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
You are the one who has harmed the future of our youth the most.
— Rahul Gandhi (@RahulGandhi) July 23, 2026
You allowed and encouraged the total capture and destruction of our education system - and protected every person responsible for it.
The students’ demands are clear:
1. Sack Dharmendra Pradhan.
2. Apologise to… https://t.co/0MK4wPMNiK
எதிர்க்கட்சிகள்
மத்திய அரசை சுற்றி வளைக்கும் எதிர்க்கட்சிகள்
ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா திடீரென அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதைச் சுட்டிக்காட்டி, "சம்பந்தப்பட்டத் துறை அமைச்சர் பதிலளிக்காமல், வேறொரு அமைச்சர் பதிலளிப்பது இந்த விவகாரத்தில் பாஜக அரசு எவ்வளவு பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது" என விமர்சித்துள்ளார்.
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா,"நீதிமன்றங்கள் அமைப்பது சிறிய குற்றவாளிகள் மற்றும் தனியார் தரகர்களைத் தண்டிப்பதற்குத் தானே தவிர, இந்த ஊழலின் ஆணிவேரான கல்வி அமைச்சரைத் தப்ப வைப்பதற்கே" எனக் காட்டமாக பதிவிட்டுள்ளார்.