
வாக்கு திருடர்களை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாக ராகுல் காந்தி பரபரப்புக் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் வாக்குத் திருடர்களைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நபர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன." என்று குறிப்பிட்டார். இந்தியா முழுவதும் பல ஆண்டுகளாக, குறிப்பிட்ட சில சக்திகள், தலித்துகள், சிறுபான்மையினர், ஓபிசி மற்றும் ஆதிவாசிகள் போன்ற எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் மக்களின் வாக்குகளைப் பட்டியலிலிருந்து நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
கண்டுபிடிப்பு
முறைகேடு எப்படி செய்யப்படுகிறது என கண்டுபிடித்ததாக ராகுல் காந்தி தகவல்
இந்த முறைகேடு எப்படிச் செய்யப்படுகிறது என்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார். தனது குற்றச்சாட்டுகள் 100% உண்மைக்குப் புறம்பானது இல்லை என்றும், நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கவே இந்தப் பிரச்சினையை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார். கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் நடந்த ஒரு குறிப்பிட்ட உதாரணத்தை ராகுல் காந்தி விளக்கினார். அங்கு, 6,018 வாக்காளர்கள் பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டதை ஒரு பூத் நிலை அதிகாரி தற்செயலாகக் கண்டறிந்தார். அந்த அதிகாரியின் மாமாவின் பெயர் நீக்கப்பட்டதைக் கண்டு, அவர் விசாரித்தபோது, வேறு ஒரு நபர் இந்தப் பெயர்களை நீக்கியது தெரியவந்தது. "வாக்கு நீக்கப்பட்டவருக்கும், அதை நீக்கியதாகக் கூறப்பட்டவருக்கும் கூட இது தெரியவில்லை. வேறு சில சக்திகள் வாக்குகளை நீக்கியுள்ளன." என்று ராகுல் காந்தி கூறினார்.