கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
அதிக கனமழையாலும், யமுனை நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாலும், தேசிய தலைநகர் டெல்லி வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்று மீண்டும் டெல்லியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் லேசான மழை பெய்தது. அதனால், இன்று அங்கு கனமழை பெய்தால், வெள்ளத்தை வெளியேற்றுவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அப்படி நடந்தால், தண்ணீர் தேங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கலாம். 45 ஆண்டு கால சாதனையை(207.49 மீட்டர்) முறியடித்து, யமுனை நதியின் நீர்மட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு 208.66 மீட்டராக உயர்ந்தது.
வெள்ளத்தில் நீந்த முயன்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
இன்றைய நிலவரப்படி யமுனை நதியின் நீர்மட்டம் 207.68 மீட்டராக குறைந்திருந்தாலும், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. மத்திய டெல்லியின் ஐடிஓ மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை(என்டிஆர்எஃப்) டெல்லிக்கு வரவழைக்கப்பட்டது. டெல்லியின் ஹனுமான் மந்திர், யமுனா பஜார், கீதா காலனி, சிவில் லைன்களுக்கு வெளியே உள்ள சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. டெல்லியின் மையத்தில் உள்ள உச்ச நீதிமன்ற கட்டிடம் வரை இந்த வெள்ளம் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வடமேற்கு டெல்லியின் முகுந்த்பூர் சௌக் பகுதியில் வெள்ளத்தில் நீந்த முயன்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். டெல்லி வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் முதல் மூன்று மரணங்கள் இவையாகும்.