குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்
குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(மார் 3) புது டெல்லியில் வைத்து நடைபெற்றது. இதில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையான உடன்படிக்கையாகும். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தலைமையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி மற்றும் ஆஸ்திரேலியாவின் பென்னி வோங் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில், அமைச்சர்கள், இந்தோ-பசிபிக் நிலவரங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினர். இந்தோ-பசிபிக் பகுதிகளில் சீனாவால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இது உலகளாவிய நலனுக்கான சக்தி: குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்
குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இன்றைய கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உக்ரைன் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். தென் சீனக் கடலில் பதட்டத்தை அதிகரிக்கும் எந்தவொரு ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளையும் தாங்கள் எதிர்ப்பதாகவும், சர்ச்சைக்குரிய பிரதேசங்களின் "இராணுவமயமாக்கல்" பற்றிய கவலைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர்கள் மேலும் தெரிவித்தனர். குவாட், உலகளாவிய நலனுக்கான சக்தியாக செயல்படுவதாகவும், அதன் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சி நிரல் மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியம் சிறந்த முறையில் வழிநடத்தப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.