சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 954 பொதுக்கழிப்பறைகள் உள்ளது. இதற்கு எவ்விதக்கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை, எனினும் இதில் பல கழிப்பறைகள் சுத்தமில்லாமல் உள்ளதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. இதனைதொடர்ந்து, 'தூய்மை இந்தியா' என்னும் திட்டத்தின்கீழ் 640 கழிப்பறைகளை தனியார் நிறுவனம் கொண்டு பராமரிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கையினை மேற்கொண்டது. இவ்வாறு தனியார்நிறுவனத்திடம் ஒப்படைத்த கழிப்பறைகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் 1913 என்னும் எண்ணுக்கு புகாரளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. தற்பொழுது அதனுடன் சேர்த்து இங்கு எழும் புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கழிப்பறைகளிலும் க்யூ.ஆர்.குறியீடு ஒட்டப்பட்டுள்ளது. அந்த குறியீட்டினை நாம் மொபைலில் ஸ்கேன் செய்யும் பட்சத்தில் அதில் ஏழு விதமான புகார்கள் குறித்து விபரங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வார்டு தூய்மை மேற்பார்வையாளர் மூலம் கழிப்பறைகள் ஆய்வு
மேற்கூறியவாறு புகார்கள் குறித்த விபரங்கள் இருக்கும் நிலையில், நாம் கூற வேண்டிய குறையினை தேர்வு செய்து, அதில் உள்ள ஆம், இல்லை என்பதை தேர்வு செய்து அனுப்பினால் உடனடியாக அந்த புகார் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட செயலி மூலம் சென்றடையும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பதிவாகும் புகார்களை கண்காணிக்கும் அதிகாரிகள் அந்தந்த வார்டு தூய்மை மேற்பார்வையாளர் மூலம் குறிப்பிட்ட கழிப்பறையினை ஆய்வு செய்து உடனே சரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் கழிப்பறைகளின் சுகாதாரம் மேம்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். பணம் வசூலிப்பதை தடுக்கவும், சுகாதாரமாக வைத்திருக்கவும் தமிழக அரசு பல கோடிகளை செலவு செய்து தனியார் நிறுவனங்களிடம் கழிப்பறையினை பராமரிக்க ஒப்படைத்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.