டெங்கு காய்ச்சலுக்கு எதிரான 'Qdenga' தடுப்பூசி: 2027-ல் இந்தியாவில் அறிமுகம், யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முதல் டெங்கு காய்ச்சல் தடுப்பூசியான Qdenga, வரும் 2027-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானை சேர்ந்த தக்கேடா மருந்தியல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. க்யூடெங்கா என்பது டெங்கு வைரஸின் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய நான்கு வகையான வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் விகாரங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும். இது 4 வயது முதல் 60 வயது வரையிலான குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
செயல்திறன்
தடுப்பூசி செலுத்தும் முறை மற்றும் செயல்திறன்
இத்தடுப்பூசி தோல் அடியில் 3 மாத இடைவெளியில் 2 டோஸ்களாக செலுத்தப்படுகிறது.
சர்வதேச அளவிலான மருத்துவ பரிசோதனைகளில், 2-வது டோஸ் செலுத்திய ஒரு வருடத்திற்கு பிறகு டெங்கு காய்ச்சல் தொற்றை கட்டுப்படுத்துவதில் இது 80.2% செயல்திறனையும், தீவிரப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதில் 90.4% செயல்திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.
தடை
யாருக்கெல்லாம் அனுமதிக்கப்படாது?
உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலின்படி, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ள நபர்கள் இத்தடுப்பூசியை எடுத்துக்கொள்ளக் கூடாது.
காய்ச்சல் அல்லது பிற நோய்த்தொற்றுகள் இருக்கும் பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 42-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இத்தடுப்பூசி, இந்தியாவில் முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் மூலம் 2027-ஆம் ஆண்டில் மக்களுக்கு கிடைக்கப்பெறும்.
இருப்பினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பும் கொசுக்கடியிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.