மணிப்பூர் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி மத்திய அரசின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை
மணிப்பூர் கலவரம் காரணமாக அங்கு நிலவி வரும் பதற்றமான சூழலினை அமைதிப்படுத்தும் வகையில் மத்திய அரசின் பிரதிநிதிகள் குகி பிரதிநிதிகளுடன் நேற்று(ஜூலை.,26) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அரசுடனான நடவடிக்கை இடைநிறுத்த ஒப்பந்தத்தின்(எஸ்ஓஓ)கீழ், மத்திய அரசின் முன்னாள் உளவுத்துறை கூடுதல் இயக்குனர் அக்க்ஷை மிஸ்ரா, குகி தீவிரவாத குழுக்களை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மற்றொரு அதிகாரி மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழுவுடன்(COCOMI) கலந்துரையாடினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. COCOMI என்பது மைதேயி சமூகத்தின் அமைப்பாகும். இந்த மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 160 பேர் பலியாகியுள்ள நிலையில், 70,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
கலவரத்தின் வீரியம் சற்று குறைந்துள்ளது என தகவல்
மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தினை தடுத்து நிறுத்த மத்தியில் மற்றும் மாநிலத்தில் உள்ள பாஜக அரசு தவறிவிட்டது என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் அமைதியினை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு தனி நிர்வாகம் வேண்டும் என்று பழங்குடியின குழுக்கள் தங்கள் கோரிக்கையினை மத்திய அரசிடம் முன்வைத்தது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமையன்று COCOMI அமைப்பு, "எஸ்ஓஓ குழுக்களுடன் அரசாங்கம் பேச கூடாது. ஏனெனில் மாநிலத்தில் நடக்கும் கலவரத்திற்கு அவர்கள் தான் காரணம்" என்னும் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதனிடையே, வன்முறையினை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அங்கு கலவரத்தின் வீரியம் சற்று குறைந்துள்ளது என்று மத்திய அரசு சார்பில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.