சாதியத்தை வளர்க்கிறதா "ப்யூர் வெஜ்" போர்டுகள்: ட்விட்டர் வாக்குவாதம்
உணவகங்களுக்கு வெளியே போடப்பட்டிருக்கும் "ப்யூர் வெஜ்" என்ற போர்டுகள் சாதிவெறியின் வெளிப்பாடு என்று ட்விட்டர் பயனர் ஒருவர் கருத்து தெரிவித்ததை அடுத்து #Pureveg என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகியது. பொதுவாக, சில தமிழக சைவ உணவகங்களுக்கு வெளியே "உயர்தர சைவம்" என்று போடப்பட்டிருக்கும். இது போன்ற வார்த்தைகளே தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்ரெண்ட் ஆன ட்விட்டர் பயனரின் பதிவில், "உணவகங்களில் "ப்யூர் வெஜ்" என்று குறிப்பிடப்பட்டிருப்பது புண்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், இது அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை. மற்ற உணவுகள் "தூய்மையற்றவை" என்று அப்பட்டமாகக் குறிப்பிடுவது போல் இவை அமைந்திருக்கிறது. வேறு உணவுகளை உண்ணும் மக்களுக்கு எதிரான பாகுபாட்டை இது வெளிப்படுத்துகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
ட்விட்டர் வாக்குவாதம்
இதையடுத்து, "ப்யூர் வெஜ்" என்பது அடிப்படையில் ஒரு சாதியை குறிக்கிறதா அல்லது அது கலப்படமற்ற சைவ உணவைக் குறிக்கிறதா என்பதை குறித்து பெரும் விவாதம் ட்விட்டரில் ஆரம்பித்தது. "இங்கே தூய்மை என்பது பிரத்தியேகத்தைக் குறிக்கிறது. இந்த உணவகங்கள் பிரத்தியேகமாக சைவ உணவை மட்டுமே சமைக்கின்றன. வெஜ் மற்றும் அசைவம் இரண்டையும் சமைக்கும் உணவகங்களில் சாப்பிடுவதை சிலர் விரும்ப மாட்டார்கள். எல்லாவற்றையும் பிரச்சினையாக்க வேண்டியதில்லை." என்று ஒருவர் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். "சுத்தமானது என்று சொன்னால் பிராமணர்களால் சமைக்கப்பட்ட சைவ உணவு என்று அர்த்தம். பிராமணர் அல்லாதவர்கள் சமைக்கும் சைவ உணவு, பிராமண வாடிக்கையாளர்கள் சாப்பிடும் அளவுக்குத் தூய்மையானதாகக் கருதப்படுவதில்லை." என்று அதில் இருக்கும் சாதிய ஏற்ற தாழ்வுகளை வெளிப்படுத்தி இருந்தார் மற்றொருவர்.