அலுவலகத்தை விட்டு வெளியேறுங்கள்: ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த அதிரடி அறிவிப்பு!
ட்விட்டர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இயங்கி கொண்டிருக்கும் நிலையில், ஊழியர்கள் அனைவரும் இன்று மாலையே டுவிட்டர் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும், அனைவரும் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் தலைமை அலுவலகலமான சிங்கப்பூரில் பணிபுரியும் ட்விட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு இமெயில் வந்துள்ளது. அந்த இமெயிலில் மாலை 5 மணிக்குள் அனைவரும் காலி செய்துவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், நாளை முதல் அனைவரும் வீட்டில் இருந்து பணிப்புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த நிலை தொடரும் எனவும், அலுவலகம் வந்து பணி செய்வதற்கான உரிய சூழல் ஏற்பட்டவுடன் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கு வாடகை தரவில்லை என உரிமையாளர் வழக்கு
இந்நிலையில், ஆசிய பசிபிக் பிராந்திய அலுவலகத்திற்கு ட்விட்டர் நிறுவன வாடகையே செலுத்தாமல் காலி செய்துள்ளனர் என கட்டிடத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் பெரும் நஷ்டத்தில் இருந்து வருகிறார். இதனாலே அவர் இந்த முடிவை எடுக்க காரணம் எனக்கூறப்படுகிறது.