புனே போர்ஷே விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனின் தாய் கைது
புனே போர்ஷே விபத்து வழக்கில், சொகுசு காரை ஓட்டிச் சென்று இருவர் மீது மோதிய இளைஞனின் தாயை புனே போலீஸார் கைது செய்தனர். விபத்து நடந்தபோது தனது மகன் குடிபோதையில் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக தாய் தனது இரத்த மாதிரியை மாற்றி தந்து அதிகாரிகளை ஏமாற்றி இருக்கிறார். அந்த விபத்து விசாரணையின் போது, இளைஞனின் ரத்த மாதிரிகள் அவரது தாயின் ரத்த மாதிரிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். மே 19 அன்று புனேவின் கல்யாணி நகரில், ஒரு 17 வயது மைனர் இளைஞன் குடிபோதையில் போர்ஷே காரை ஓட்டி சென்று ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் கொல்லப்பட்டனர்.
குற்றத்தை மறைக்க செல்வாக்கு மிக்க குடும்பத்தினர் செய்த முயற்சிகள்
இதனையடுத்து, அந்த 17 வயது இளைஞன் ஒரு கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பழியை தங்களது டிரைவர் மீது போட முயன்ற அந்த இளைஞனின் தந்தை மற்றும் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தை மறைக்க செல்வாக்கு மிக்க குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் முதலில் தங்கள் குடும்ப டிரைவருக்கு பணத்தை கொடுத்து இந்த விபத்திற்கான பழியை ஏற்க வற்புறுத்தி இருக்கின்றனர். ஆனால், அந்த டிரைவர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை கடத்தி சென்று மிரட்டி இருக்கின்றனர். மருத்துவமனைக்கு ரத்த மாதிரியை வழங்குவதிலும் ஏமாற்று வேலை செய்யப்பட்டிருக்கிறது.