போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது
புனேவில் காரை ஓட்டி இரண்டு பேரைக் கொன்ற 17 வயது சிறுவனின் தந்தை புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுவன் மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவன் ஆவான். புனேவின் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. போலீஸ் அறிக்கைகளின்படி, அந்த 17 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற சொகுசு போர்ஷே கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதால், அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், ஒரு குறுகிய பாதையில் அந்த சிறுவன் மணிக்கு 200 கிமீ வேகத்தில் காரை ஓட்டி சென்றது தெரியவந்துள்ளது.
சிறுவனுக்கு மது வழங்கிய பார் உரிமையாளர்கள் மீது வழக்கு
அந்த மைனர் சிறுவன் தனது 12 ஆம் வகுப்பு முடிவுகளை உள்ளூர் பப்பில் கொண்டாடிவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு முன் அந்த சிறுவன் மது அருந்துவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 25 ஆகும். எனவே, அந்த சிறுவனுக்கு மது வழங்கிய பார் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து 15 மணிநேரத்திற்குள் சிறார் நீதி வாரியம் காவலில் வைக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டாய கவுன்சிலிங், போதை ஒழிப்புத் திட்டம் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த 300-சொல் கட்டுரை எழுதுவது உள்ளிட்ட மறுவாழ்வு நிபந்தனைகள் அந்த சிறுவனுக்கு தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.