புதுச்சேரியில் பெண் உடற்பயிற்சியாளர் எனக்கூறி பெண்களின் நிர்வாண படங்களை பெற்ற நபர் கைது
புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் செயலியில், குறைந்த நாட்களில் உங்கள் உடல் எடையினை குறைக்கலாம், நீங்கள் அழகாக வேண்டுமா?என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஒரு பெண் பேசுவது போல் ஆடியோ மூலம் சில பயிற்சிகளும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நம்பி புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள். அடிக்கடி அந்த இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பேசிய பெண் நாங்கள் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அழகிய கட்டுடலை நீங்கள் பெறலாம். அதற்கு நீங்கள் உங்கள் ஆடையில்லா புகைப்படங்களை அனுப்பவேண்டும். அப்போதுதான் அதற்கேற்ப உடற்பயிற்சிகளை உங்களுக்கு நாங்கள் பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி பல பெண்கள் தங்கள் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து, உடற்பயிற்சி ஆலோசனைகளை பெற்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
பணம் பறிக்க நூதன மோசடி
இதனை தொடர்ந்து இப்பெண்களுக்கு வேறொரு இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இருந்து உங்களின் அந்தரங்க புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. இந்த எண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாணமாக வரவேண்டும் என்று ஒரு ஆண் மிரட்டியுள்ளார். இதில் சந்தேகமடைந்த பெண்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், உடற்பயிற்சி வல்லுநர் என கூறி பேசி பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்றது ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது. அந்நபர் முத்தியால்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான திவாகர்(22) என்றும், பெண்களிடம் பணம் பறிக்கவே இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரது போனை பறிமுதல் செய்துள்ளார்கள்.