LOADING...
'சைக்கோ' கொலையாளி தஷ்வந்த் விடுதலை குறித்த குழப்பமும், மக்கள் கொந்தளிப்பும்!- உங்கள் கருத்து என்ன?
தஷ்வந்த் நேற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்

'சைக்கோ' கொலையாளி தஷ்வந்த் விடுதலை குறித்த குழப்பமும், மக்கள் கொந்தளிப்பும்!- உங்கள் கருத்து என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2025
02:29 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் மனசாட்சியை உலுக்கிய ஒரு 'சைக்கோ' குற்றவாளியான தஷ்வந்த் நேற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த தீர்ப்பு பலரின் மனசாட்சியை உலுக்கியது. விடை தெரியாத பல கேள்விகளும் பலரின் மனதில் எழுந்துள்ளது. முறையான விசாரணை மேற்கொண்ட விசாரணை அதிகாரிகள், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என போராடியவர்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் என பலரும் இந்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி விவரம் அறிந்த பலரும் நேற்று நிம்மதியாக உறங்கினார்களா என்பது கேள்விக்குறியே! இந்தியாவின் நீதித்துறையை கேள்விக்குள்ளாக்கி உள்ள இந்த தீர்ப்பில், குற்றவாளியின் மரண தண்டனை ஏன் ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்பதை பலரும் அறிவார்கள்.

வழக்கு

சிறுமி கொலை வழக்கு: தண்டனையும் மேல்முறையீடுகளும்

கடந்த 2017, சென்னை போரூரை சேர்ந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, தடையத்தை அழிக்க சிறுமியை எரித்து கொன்ற வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டான். அப்போது அவனுக்கு வயது 22. இந்த வழக்கில், 2018ஆம் ஆண்டு செங்கல்பட்டு நீதிமன்றம், தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தூக்கு தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தபோது, உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்ட நேரத்தில் அவனது தூக்கு தண்டனைக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டது. தற்போது அந்த வழக்கில் தான் தீர்ப்பு வெளியாகி அவனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை

தாயை கொலை செய்த வழக்கு மற்றும் 'விடுதலை' குறித்த குழப்பம்

சிறுமி கொலை வழக்கில் குண்டாஸ் சட்டத்தில் சிறைப்பட்டிருந்த தஷ்வந்த், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தபோது, அவனது தாய் சரளாவை கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, நகைகளுடன் மும்பைக்குத் தப்பி ஓடியதாக கூறப்பட்டது. தலைமறைவாக இருந்த தஷ்வந்த்தைத் தமிழக காவல்துறை மும்பையில் கைது செய்தது. தாய் கொலை வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்தபோது, முக்கியச் சாட்சியாக இருந்த அவனது தந்தை, திடீரென பிறழ்சாட்சியாய் மாறினார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தாயைக் கொலை செய்த வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டான் (சாட்சிகள் இல்லாததால் குற்றமற்றவன் என தீர்ப்பளிக்கப்பட்டது). தாய் கொலை வழக்கில் அவன் விடுதலை செய்யப்பட்ட செய்தியே, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அவர் மீது சாட்டப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரமில்லை எனக்கூறி அவரது மரண தண்டனையை ரத்து செய்தது. பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவில், 'எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி, குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த் ஆகிய இருவரையும் கடைசியாக பார்த்தது யார், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவில் தஷ்வந்த் எங்கு செல்கிறார், சாட்சிகளின் ஒப்புதல் வாக்குமூலம், தடயவியல் ஆய்வறிக்கை போன்றவற்றை ஆராய்ந்ததில், குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்துக்கிடமின்றி சரிவர நிரூபிக்கத் தவறியுள்ளது" எனக்கூறியது. "டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளும் பொருந்தவில்லை. போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து அவரை வழக்கில் இருந்து விடுவிக்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொந்தளிப்பு

பொதுமக்களின் கொந்தளிப்பும்; நீதி மீதான கேள்வியும்

தஷ்வந்த் போன்ற கொடூரக் குற்றவாளிக்கு, ஒரு வழக்கில் கீழமை நீதிமன்றங்கள் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் சார்ந்து தண்டனையை உறுதி செய்திருந்தும் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி அவர் விடுதலை செய்யப்பட்டது, சமூகத்தில் பின்வரும் கேள்விகளை எழுப்பியது: 1.குற்றத்தின் பின்னணி தெளிவாக இருந்தபோதிலும், சட்டச்சிக்கல்களால் குற்றவாளிகள் தப்பிப்பது சரியானதா? 2.தொடர் குற்றங்களைச் செய்த ஒருவன், விடுதலையாகி வெளியில் வந்தால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? 3.கொடூர குற்றவாளியான தஷ்வந்த் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சாமர்த்தியமாக செயல்பட்டாரா அல்லது பாதிக்கப்பட்டவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சிரத்தை எடுக்கவில்லையா? எது எப்படியாகினும் இந்த தீர்ப்பு, பொதுமக்கள் மத்தியில் சட்டத்தின் மீதான நம்பிக்கையை உலுக்கியுள்ளது.

எதிர்வினை

மௌன விரதத்தில் இருக்கும் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும்

இந்த வழக்கு குறித்து பிரபல 'நியாயம்' பேசும் ஊடகங்களும், மக்களுக்காக 'குரல்' கொடுக்கும் பல நீதிமான் அரசியல் கட்சிகளும் மௌனமாக இருப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. கரூர் கூட்ட நெரிசலில் பல அப்பாவி உயிர்கள் பலியானதற்கு போட்டிபோட்டு பல அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் அறிக்கை வெளியிடுவதும், நேரில் சென்று ஆறுதல் கூறுவதுமாக இருந்த வேளையில், இத்தகைய முக்கிய வழக்கை குறித்து ஆளும் கட்சியோ, எதிர் கட்சியோ வாயை திறக்காமல் மௌனமாக இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. எல்லாம் தேர்தல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அரசியல் கட்சிகளுக்கு இந்த வழக்கு பெரிய லாபம் தராத காரணத்தால் அவர்கள் கண்டும் காணாமல் இருக்கின்றனரா என்பது அவர்களின் மனசாட்சிக்கே வெளிச்சம்!