
போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: தஷ்வந்த்தை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
சென்னை அருகே போரூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் எரித்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில், முக்கிய குற்றவாளியான தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் இருந்து அவரை முற்றிலுமாக விடுவித்து உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் இந்த விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
மரண தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள்
தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் வழக்கு தொடர்பான வீடியோக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் சரியாக ஒத்துப்போகவில்லை என்றும் மிக முக்கியமான மரபணு பரிசோதனை (DNA) முடிவுகள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவில்லை என்றும், நீதிபதிகள் தஷ்வந்தை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளனர்.
விடுதலை
தாயை கொன்ற வழக்கில் ஏற்கெனவே விடுதலை
போரூர் சிறுமி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், அதன் பின்னர் தனது தாயை அடித்து கொன்றுவிட்டு நகைகளுடன் மும்பைக்கு தப்பிச் சென்றதாக கைது செய்யப்பட்டார். தாயை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கிலும், தஷ்வந்தின் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால், போதிய ஆதாரங்கள் இன்றி செங்கல்பட்டு நீதிமன்றம் அவரை ஏற்கெனவே விடுவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தால் தஷ்வந்த் விடுவிக்கப்பட்டு உள்ளதால், இந்த வழக்கின் ஆரம்பத்தில் இருந்து நீதிக்காகப் போராடிய சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.