தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவியேற்றார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகா மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி, இன்று(மே.,11)தமிழக நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 2 ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைந்த ஆண்டுகள். ஸ்டாலின் தலைமையின் கீழ் பெருந்தொற்று காலத்தின் போது ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும், பெருந்தொற்றுக்கு பிறகு 2 ஆண்டு பட்ஜெட்களையும் சமர்ப்பித்துள்ளேன். முந்தைய ஆட்சியின்போதான உச்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன்கள் இருந்தாலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத்திட்டங்கள் மற்றும் மூலதன செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இது என் பொதுவாழ்வு மற்றும் என் வாழ்க்கையிலும் மிக சிறப்பான பகுதியாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
தங்கம் தென்னரசுவுக்கு வாழ்த்து தெரிவிப்பு
மேலும் அவர், உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலாகாவை மு.க.ஸ்டாலின் எனக்கு வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன்மையத்தினை நிறுவி நிர்வாகத்தின் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற ஐ.டி.மற்றும் ஐ.டி.இ.எஸ்.தொழில் துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சக பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துஅவர், இன்று நிதியமைச்சராக பொறுப்பேற்கும் தங்கம் தென்னரசு வெற்றிகரமாக செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரிவுபடுத்தி புதிய சாதனைகளை படைப்பார் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.