'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்
மே 5ஆம் தேதி வெளியாக இருக்கும் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் படத்தை "பிரசாரப் படம்" என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின்(IUML) இளைஞர் பிரிவான முஸ்லீம் யூத் லீக், 'தி கேரளா ஸ்டோரி' ஆதரவாளர்களுக்கு ஒரு சவாலை இன்று முன்வைத்துள்ளது. 'லவ் ஜிகாத்' மூலம் 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக படத்தில் வரும் குற்றச்சாட்டை நிரூபிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் பி.கே. ஃபிரோஸ் அறிவித்துள்ளார்.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது : கேரள முதல்வர்
ஆதாரம் உள்ளவர்கள் அதை முஸ்லீம் யூத் லீக்கின் மாவட்ட மையங்களில் உள்ள கவுன்டரில் சமர்ப்பித்து விட்டு பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று பி.கே.ஃபிரோஸ் கூறியுள்ளார். "32,000 பெண்கள் சிரியாவிற்கு இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று சங்பரிவார் தயாரித்த திரைப்படம் கூறுகிறது. அவர்கள் தங்களிடம் உண்மையான புள்ளிவிவரங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். அப்படி இருக்கையில், கேரளாவில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தது 30 பேர் சிரியாவிற்கு அழைத்து செல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களின் முகவரியைக் கேட்டால் பதில் இல்லை." என்று பி.கே.ஃபிரோஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.