மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் இன்று (10ம் தேதி) வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தனர். இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "தொழில் தகராறு சட்டத்தின்படி, சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது. அதே போல், சட்டப்படி வேலை நிறுத்த போராட்டத்திற்கு 6 வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கையானது வெளியிட வேண்டும், ஆனால் இவர் வெளியிடவில்லை. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதம் செய்தனர்.
பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில் வேலைநிறுத்த போராட்டம்
தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "மின்வாரிய ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கை குறித்து இன்று காலை பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில், வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது. மேலும் இவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டால் ஆவின் பால் விநியோகம், மருத்துவமனை செயல்பாடுகள், பள்ளி கல்லூரி செயல்பாடுகள் முதலியன பாதிக்கும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதம் செய்தார். இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது. மேலும் இவர்கள் வேலைநிறுத்ததால் பொதுமக்கள் பாதிக்கக்கூடும்" என்று கூறி வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.